தியாகராயநகரில் போக்குவரத்து மாற்றம்; நாளை முதல் ஒருவாரம் அமலில் இருக்கும்


தியாகராயநகரில் போக்குவரத்து மாற்றம்; நாளை முதல் ஒருவாரம் அமலில் இருக்கும்
x

சென்னை தெற்கு உஸ்மான் சாலை இணைப்பு மேம்பால கட்டுமான பணி காரணமாக தியாகராயநகரில் நாளை முதல் ஒருவார காலம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை

சென்னை தியாகராயநகர் தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணா சாலை சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு வரை இணைப்பு மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் ஒரு வாரம் சோதனை ஓட்டம் செய்யப்பட உள்ளது.

* அண்ணா சாலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள் மற்றும் வாகனங்கள் தியாகராயநகர் மேட்லி சந்திப்பு செல்வதற்கு கண்ணம்மாபேட்டை சந்திப்பில் இடதுபுறமாக திரும்ப வேண்டும். பின்னர், புதிய போக் சாலை சென்று முத்துரங்கன் சாலை வழியாக வலது புறமாக திரும்பி முத்துரங்கன் சாலை மேட்லி சந்திப்பில் வலது புறமாக திரும்பி தியாகராயநகர் பஸ் நிலையம், உஸ்மான் சாலையை சென்றடையலாம்.

* போத்தீஸ் மேம்பாலத்தில் இருந்து உஸ்மான் சாலை வரும் மாநகர பஸ்கள் (47,47A -வழித்தட எண்) இடதுபுறம் சென்று பர்கிட் சாலை வழியாகவும் மற்றும் தியாகராயநகர் பஸ் நிலையத்தில் இருந்து வெளி நுழைவுவாயில் வழியாக வரும் மாநகர பஸ்கள் அண்ணாசாலை செல்வதற்கு மேட்லி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி பர்கிட் ரோடு வழியாக மூப்பாரப்பன் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி சி.ஐ.டி. நகர் ரவுண்டானா அடைந்து இணைப்பு சாலை வழியாகவும் அல்லது 5-வது மெயின் ரோடு வழியாகவும் அண்ணா சாலையை அடையலாம்.

* மேட்லி சந்திப்பில் இருந்து மூப்பாரப்பன் சாலை வரை பர்கிட் ரோடு ஒருவழி சாலையாக மாற்றப்படுகிறது.

* போத்தீஸ் மேம்பாலத்தில் இருந்து உஸ்மான் சாலை வரும் இலகுரக வாகனங்கள் மேட்லி சந்திப்பில் வலது புறமாக திரும்பி மேட்லி சுரங்கப்பாதை வழியாக மேற்கு மாம்பலம் மற்றும் மேற்கு சைதாப்பேட்டையை அடையலாம்.

* ஜிம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் தண்டபாணி தெருவில் இடதுபுறம் திரும்பி மூப்பாரப்பன் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி. நகர் அடையலாம்.

* வெங்கட் நாராயணா சாலையில் இருந்து தியாகராயநகர் செல்லும் வாகனங்கள் பர்கிட் சாலை மூப்பாரப்பன் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மூசா சாலை வழியாக தியாகராயநகர் சென்றடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story