சொர்ணாம்பிகை-பொன்வாசிநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்


சொர்ணாம்பிகை-பொன்வாசிநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்
x

இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

சித்திரை திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை, மாலை என இருவேளையும் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு மண்டகப்படிதாரர்களின் சார்பில் சிறப்பு பூஜையும் வீதி உலாவும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கடந்த 30-ந் தேதி சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினர். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் ஊர்பொதுமக்கள், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க கம்பீரமாக முக்கிய வீதிகளில் பவனி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் குவிந்து நின்று அர்ச்சனை செய்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு தேர் கோவில் நிலையை வந்தடைந்தது.

இன்று தீர்த்தவாரி

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. இன்று (புதன்கிழமை) மாலை தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் போலீசார் செய்திருந்தனர்.


Next Story