கம்பம், உப்புக்கோட்டையில் சூரசம்ஹாரம்; அம்பு எய்து பத்மாசூரனை வதம் செய்த பெருமாள்
கம்பம், உப்புக்கோட்டையில் நவராத்திரி விழாவையொட்டி நடந்த சூரசம்ஹாரத்தில், அம்பு எய்து பத்மாசூரனை பெருமாள் வதம் செய்தார்.
கம்பம், உப்புக்கோட்டையில் நவராத்திரி விழாவையொட்டி நடந்த சூரசம்ஹாரத்தில், அம்பு எய்து பத்மாசூரனை பெருமாள் வதம் செய்தார்.
சூரசம்ஹாரம்
கம்பத்தில் உள்ள கம்பராயப்பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வந்தது. இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது வாழை கன்றை அசூரனாக பாவித்து, அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக மாலையம்மாள்புரத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை வில் அம்புடன் கோவில் அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கம்பராயப்பெருமாள் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதைத்தொடர்ந்து கம்பராயப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்துக்கு வந்தார். அப்போது எதிர் திசையில் வாழை கன்றுக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்பு 3 முறை வாழை மரத்தின் மீது அம்பு எய்து, சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில், கோவில் அர்ச்சகர் கண்ணன் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கம்பம் காசி விசுவநாதர் கோவிலில், சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
உப்புக்கோட்டை
இதேபோல் உப்புக்கோட்டையில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் வில் அம்புடன் எழுந்தருளினார். எதிரே பத்மாசூரனாக வாழை மரத்தை பாவித்து வைத்திருந்தனர். பின்னர் அம்பு எய்து பத்மாசூரனை பெருமாள் வதம் செய்தார். அப்போது வாழை மரத்தில் வைத்திருந்த ரூ.1,000 காணிக்கையை இளைஞர்கள் போட்டிப்போட்டு எடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், உப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.