தீர்வு எட்டப்படவில்லை: தமிழ், சமஸ்கிருதத்தில் பழமையான மொழி எது? கவர்னர் பேச்சு
தமிழ், சமஸ்கிருதத்தில் பழமையான மொழி எது என்பதில் தீர்வு எட்டப்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
சென்னை,
சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று யுவ சங்கம் என்ற தலைப்பில் பீகார் மாநில மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் பிறந்து வளர்ந்த மாநிலம் பீகார். தமிழகத்திற்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் நான் தினம் தினம் ஒன்றை கற்றுக்கொண்டிருக்கிறேன். தமிழகம் சிறந்த மாநிலம். தமிழ், உலகின் சிறந்த மொழி. உலகின் பழமையான மொழிகள் சமஸ்கிருதம், தமிழ் ஆகும். இவற்றில் எது பழமையான மொழி என்பதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.
சமஸ்கிருதத்தில் இருந்து பல வார்தைகள் தமிழ் மொழிக்கும், தமிழில் இருந்து பல வார்த்தைகள் சமஸ்கிருதத்திற்கும் சென்றுள்ளன. இரண்டு மொழிகளும் சமமாக உள்ளன. மாணவர்கள், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்குறளை கற்க வேண்டும். இதில் இருந்து தமிழ் மொழி எவ்வளவு சிறந்தது என்பதை அறியலாம்.
காசி, ராமேசுவரம்
பாரதம் 1947-ம் ஆண்டில் உருவாக்கப்படவில்லை, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது பாரதம். இந்த நாட்டை ராஜாக்களும், ஆட்சியாளர்களும் எந்த பாகுபலியும் உருவாக்கவில்லை. பாரதம், ரிஷிக்களால் உருவாக்கப்பட்டது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கல்விக்காகவும், குடியேறவும் பயணிக்க தொடங்கினர். இதில், எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. நுாறு ஆண்டுகளுக்கு முன்பு 40 ஆயிரம் தமிழர்கள் காசிக்கு சென்றனர். சவுராஷ்டிராவை சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருகை தந்தனர்.
நாட்டில் பல ராஜாக்கள் இருக்கலாம் ஆனால், மக்கள் ஒன்றுதான். அந்த கால கட்டத்தில் மொழிகள் யாருக்கும் தடையாக இருந்ததில்லை. என் தாயும், பாட்டியும்கூட பாட்னாவில் இருந்து ராமேசுவரத்துக்கு பயணம் மேற்கொண்டனர். வாழ்வில் ஒருமுறையாவது காசிக்கும், ராமேசுவரத்துக்கும் செல்ல வேண்டும் என்று நினைத்து பயணித்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
என்ன உணவு?
பின்னர் பீகார் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
தமிழகத்தில் எனக்கு பிடித்த பகுதி எது என்று கேட்டால், உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த பாகம் எது என்று கேட்டால் எதைச் சொல்லுவோம்? செல்லும் இடங்கள் எல்லாமே நமக்கு பிடிக்கும். காலை உணவு இட்லி, தோசை, கொஞ்சம் பொங்கல், மாலையில் சப்பாத்தி, காய்கறிகள், தயிர் சாப்பிடுவேன். இரவில், சிறுதானிய உணவுகளை உண்பேன். பள்ளி நாட்கள் கடினமாக இருந்தாலும், என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகளே அதிகம் உள்ளது. பள்ளியில் படித்தபோது, மழை காலங்களில் செருப்பை கையில் எடுத்துக் கொண்டு சேற்றில் நடந்து செல்வேன்.
மகிழ்ச்சி இல்லை
உங்களுக்கு கவர்னர் பதவி மகிழ்ச்சி அளிக்கிறதா? என்று கேட்டால், உண்மையில் கவர்னர் ஆனது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஆனால் இது ஓர் வாய்ப்பு. நாம் செய்ய நினைக்கும் நற்செயல்களுக்கு யாரும் தடைபோட முடியாது.
எனக்கு சிறுவயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. சொல்லப் போனால், எனக்கு நடந்தது குழந்தை திருமணமாகும். என் மனைவி கல்லூரி படிப்பு படிக்கவில்லை. ஆனால், அவர்தான் என் பலத்துக்கு தூணாக விளங்குகிறார்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.