பொலிவிழந்த சோலையாறு அணை பூங்கா
பொலிவிழந்த சோலையாறு அணை பூங்கா
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக வால்பாறை விளங்குகிறது. இங்கு அட்டகட்டி, ஹார்ன்பில் காட்சி முனை, கூழாங்கல் ஆறு, பாலாஜி கோவில், கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயம், சோலையாறு சித்தி விநாயகர் கோவில், நீரார் அணை, சோலையாறு அணை, அதன் காட்சிமுனை மற்றும் பூங்கா, நல்லமுடி பூஞ்சோலை என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சோலையாறு அணை உள்ளது.
பராமரிப்பு இல்லை
தமிழக-கேரள எல்லையில் உள்ளதால், இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதை கருத்தில் கொண்டு சோலையாறு அணை பகுதியில் சுற்றுலா தொழிலை மேம்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், தற்போதைய நிலவரப்படி சோலையாறு அணை, அதன் பூங்கா மற்றும் காட்சிமுனை ஆகியவை உரிய பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படுகிறது. இங்கு சுற்றுலா தொழிலை மேம்படுத்த தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனாலும் அதை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படாமல் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்தால் வியாபாரம் உள்பட பொருளாதார ரீதியிலும் உள்ளூர் மக்கள் பயனடைவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதுகுறித்து நகராட்சி கவுன்சிலர் இந்துமதி கூறியதாவது:
சோலையாறு அணையையொட்டி பூங்கா உள்ளது. இது அணை திறக்கப்பட்ட 1972-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் மட்டுமே உரிய பராமரிப்பில் இருந்தது. அதன்பிறகு பராமரிப்பின்றி விடப்பட்டது. அதை பொதுப்பணித்துறை பராமரித்து பல்வேறு வண்ண விளக்குகளால் ஆன நீரூற்றுகள், குழந்தைகள் விளையாடுவதற்கான உபகரணங்கள், மலர் செடிகள், மீன் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மேலும் மலம்புழா அணையில் இருப்பது போன்று சோலையாறு அணையின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு செல்லும் வகையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும். அணையில் இருந்து மதகு வழியாக கேரளாவிற்கு தண்ணீர் திறக்கும்போது, அதை காவடி பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நின்று ரசிக்கின்றனர். இதன் அருகில் தூரிப்பாலம் அமைக்க வேண்டும். மேலும் சோலையாறு அணையின் காட்சி முனையாக விளங்கும் சேடல் டேம் பகுதியில் காட்சி மாடம் அமைக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். இதற்கு கோவை மாவட்ட சுற்றுலா துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சோலையாறு அணை பகுதிக்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைந்த வாடகையில் கடைகள்
சோலையாறு நகர் வியாபாரிகள் சங்க தலைவர் சசிதரன்:
வால்பாறை பகுதியில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வரும் ஒரே சுற்றுலா தலம் சோலையாறு அணை பகுதி மட்டுமே. ஆனால் இங்கு எந்தவொரு துறையின் சார்பிலும் சிறிய வளர்ச்சி பணிகள் கூட நடைபெறவில்லை. குறிப்பாக சோலையாறு அணை பகுதியின் மேல் பகுதியில் சுற்றுலா பயணிகள் மழைக்காலத்தில் ஒதுங்கி நின்று ரசிப்பதற்கு கூட மேற்கூரையுடன் கூடிய இடவசதி இல்லை. எனவே மேம்பாட்டு பணிகளை தொடங்கினால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதோடு வியாபாரம் பெருகி பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
இங்கு சாலையோரத்தில் சிறு வியாபாரிகள் கடைகள் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் குறைந்த வாடகையில் கடைகள் கட்டித்தர வேண்டும். சுற்றுலா பயணிகள் உணவு அருந்துவதற்கு சோலையாறு நகர் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கு வர வேண்டும். ஆனால் சாலை மிகவும் பழுதடைந்து பெயர்ந்து உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
சுத்தமான குடிநீர்
டீக்கடைக்காரர் ஜெகதீஷ் குமார்:
கேரளாவிற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வால்பாறை வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் சோலையாறு அணை பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கேரளாவிற்கு செல்ல வேண்டுமானால் சோலையாறு அணை பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் சோலையாறு அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இங்கு நவீன கட்டண கழிப்பிட வசதி கூட பயன்பாட்டில் இல்லாமல் மூடி கிடக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுத்தமான குடிநீர் வசதி இல்லை. இதனால் எங்கு பார்த்தாலும் சுகாதாரமில்லாமல் குப்பைகள், புதர் செடிகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே உரிய முறையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.
வாகன 'பெர்மிட்'
தங்கும் விடுதி உரிமையாளர் குஞ்சாலி:
கேரளாவில் வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த மாநிலத்தின் சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் தமிழக-கேரள எல்லையில் உள்ள மளுக்கப்பாறை வனத்துறை சோதனை சாவடி வரை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. அங்கிருந்து சோலையாறு அணையை காண செல்லும் சுற்றுலா பயணிகள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ மற்றும் தனியார் வாடகை வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது. எனவே சோலையாறு அணை வரை கேரள அரசு பஸ்கள் வந்து செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் தமிழகம் வழியாக செல்லவும், தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் கேரளா வழியாக செல்லவும் போக்குவரத்து துறையின் வாகன ெபர்மிட் எடுக்க வேண்டி உள்ளது. அதற்கான வசதி சோலையாறு அணை பகுதி மட்டுமின்றி வால்பாறையிலும் இல்லை. இதனால் இருமாநில சுற்றுலா பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.