கல்லூரி மாணவர்களை கவர மதுபாட்டில் வடிவில் குளிர்பானங்கள் - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்


கல்லூரி மாணவர்களை கவர மதுபாட்டில் வடிவில் குளிர்பானங்கள் - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
x

கல்லூரி மாணவர்களை கவரும் வகையில் மதுபாட்டில் வடிவில் இருந்த குளிர்பானங்களை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகாசி,

சிவகாசி சுகாதார அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் சுகாதார பிரிவினர் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? காலாவதியான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியின் அருகில் உள்ள கடைக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் அந்த கடையில் இருந்த குளிர்பானங்கள் காலாவதி ஆனதா? என ஆய்வு செய்த போது அங்கு மதுபாட்டில்கள் வடிவில் குளிர்பானங்கள் இருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அந்த பாட்டிலில் உள்ள தகவல்களை சரி பார்த்தபோது அது மதுபாட்டில் இல்லை என்று தெரியவந்தது. ஆனால் உருவ ஒற்றுமை மதுபாட்டிலை போன்றே இருந்துள்ளது. இதுகுறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது,

இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில் சில குளிர்பான நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மதுபாட்டில் போன்று வடிவமைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதை பலர் ஆர்வமுடன் வாங்கி பருகிவருகிறார்கள். இதில் மதுவகையில் உள்ள ஆல்கஹால் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தாலும் இது குறித்து உரிய ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க மேல் அதிகாரிகளுக்கு மாதிரி அனுப்பி வைக்கப்படும் என்றார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில் போன்ற குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Next Story