பிரிந்து வாழும் கணவன் மனைவியை சேர்த்து வைக்க முயற்சிப்பது ஏன்? அமைச்சர் கீதாஜீவன் பேச்சு


பிரிந்து வாழும் கணவன் மனைவியை சேர்த்து வைக்க முயற்சிப்பது ஏன்? அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
x

நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆலோசனை மையத்திற்கு புதிய கட்டிடத்தை சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

சென்னை:

நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆலோசனை மையம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆலோசனை மையத்திற்கு சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலக சாலையில் போலீஸ் மருத்துவமனை அருகில் எழில்மிகு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவும், நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆலோசனை மையத்தின் ஓராண்டு நிறைவு விழாவும் நேற்று மாலை நடந்தது. சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு,புதிய கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது,

பதவி ஏற்ற 20 நாட்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்பதுதான். அவரது உத்தரவுப்படி, பெண்கள் மற்றும் குழ ந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையும் விரைவாக தாக்கல் செய்யப்படுகிறது. இதில் சமூகநலத்துறையும், காவல்துறையும் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது. பழைய காலத்தில் நடந்த குற்றங்களில் கூட இப்போது, புகார் கொடுக்கும் நிலையை உருவாக்கி உள்ளோம். அதிலும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பெண்களிடம் குறைகளை கேட்டாலே அவர்களின் மனக்குறை தீர்ந்து விடும். அதற்கு பிறகு அவர்களது மாப்பிள்ளையை கைது செய்வோம், என்று சொன்னால் கூட வேண்டாம், நாளை வருகிறேன் என்று போய் விடுவார்கள்.

உங்களது துறையில் எப்போதும் குடும்பத்தில் சேர்ந்து இரு, சேர்ந்து இரு என்று தானே சொல்கிறார்கள், என்று என்னிடம் சிலர் கேட்டார்கள். அவர்களது குழந்தைகளின் வாழ்க்கையை பார்க்க வேண்டும்.

பள்ளியில் ஒரு குழந்தைக்கு அவரது தந்தை இனிப்பு வாங்கி கொடுத்து விட்டு செல்லும் போது, பக்கத்தில் இருக்கும் குழந்தை நம்ம அப்பா நமக்கு இனிப்பு வாங்கி தரவில்லையை என்று ஏங்கும். அந்த குழந்தை வீட்டுக்கு போய், நம்ம அப்பா எங்கே? என்று கேட்கும். அப்பாவை பார்த்தால்தான் பள்ளிக்கு போவேன் என்று அடம் பிடிக்கும். அந்த அளவுக்கு அந்த குழந்தையின் மனநிலை பாதிக்கும்.

ஒரு சிறிய பிரச்சினைக்காக தாய்-தந்தை பிரிந்து வாழும்போது, குழந்தையின் எதிர்காலம் பாதிக்கும். பெண்களின் வாழ்வாதாரமும் பாதிக்கிறது. குழந்தைகள் தாய்-தந்தையின் அன்புக்காக ஏங்கும். சேர்ந்து வாழ்வதுதான் தமிழ் பாரம்பரியம்.

அதனால்தான் முதலில் சேர்ந்து வாழ எங்கள் துறை ஆலோசனை வழங்குகிறது. அதற்கு பிறகு அது முடியாத பட்சத்தில்தான் சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது. தினமும் 500 பெண்கள் 181 உதவி எண்ணிற்கு போன் செய்து உதவி கேட்கிறார்கள். அவர்களது பிரச்சினை தீர்த்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் கலந்து கொண்டு பேசினார். இணை போலீஸ் கமிஷனர் சாமுண்டீஸ்வரி, நடிகை சாய்பல்லவி மற்றும் ஏராளமான போலீஸ் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story