அனைவரும் சமமாக நடத்தப்படுவதே சமூகநீதி: "பொது சிவில் சட்டம் அவசியமானது" - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே சமூகநீதி. இதற்கு பொது சிவில் சட்டம் அவசியமானது என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூரில் நேற்று நடந்த அரியநாதர்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே சமூகநீதி. பல்வேறு மதங்கள் உள்ள நாட்டில் சமூகநீதி தேவை என்பதற்காகவே பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது. பொதுசிவில் சட்டம் அவசியம். பொதுசிவில் சட்டம் ஒரு சமூகத்திற்கு எதிரான சட்டம் என ஒருசிலரால் தவறான கருத்து பரப்பப்படுகிறது.
பொதுசிவில் சட்டத்திற்கு டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார். முத்தலாக் சட்டத்தைக்கூட சிலர் அரசியலாக்கி வருகின்றனர். இந்தியாவில் எல்லா மத நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதை பொறுத்தே மேகதாது அணை பிரச்சினை குறித்து இங்கு உள்ளவர்கள் பேசுகிறார்கள். ஆன்மிகம் நமது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலகுக்கே வழிகாட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெளிவாக கூறி இருக்கிறார். அந்த ஆன்மிகம் பரந்துபட்ட, எல்லோருக்கும் பாரபட்சமில்லாத ஒரு நம்பிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அது கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்து மதம் சார்ந்த கருத்துகளையோ, விழாக்களையோ பற்றி பேசுவது தவறு என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் கூட இந்து மத விழாக்களுக்கு வாழ்த்துகள் கூறுவதில்லை. இதுபோன்ற எண்ணம் இருக்கக்கூடாது. பாரபட்சம் இல்லாத ஆன்மிக நிலை நமக்கு இருக்க வேண்டும்.
தமிழகத்தில் கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விடுவதாக ஒரு செய்தியை பார்த்தேன். அது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள எலிகள் கஞ்சாவை தேடி போலீஸ் நிலையம் வருவதால், போலீஸ் நிலையங்களில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள கஞ்சாவுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும், எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? என்ற ஒரு பெரிய பிரச்சினை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.