நெல்லை மாவட்டத்தில் இதுவரை 132 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 132 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி மஞ்சான்குளத்தை சேர்ந்தவர் சுடலைகண்ணு. இவரின் மகன் சுப்பையா என்ற மணி (வயது 28). இவரை நாங்குநேரி போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் நாங்குநேரி நம்பிநகரை சேர்ந்த முத்துராக்கு மகன் வானமாமலை (28) என்பவரை அடிதடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்ட 186 பேரும், போதைப்பொருட்கள் விற்றதாக 16 பேரும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக 18, ரேஷன் அரிசி கடத்தியதாக 4 பேர் என மொத்தம் 224 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 132 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல் நெல்லை மாநகரில் கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்டதாக 64 பேரும், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 4 பேரும், போதைப்பொருள் விற்ற 19 பேரும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 6 பேரும் உள்பட 96 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்ட 37 பேரும், குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 9 பேரும், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரும், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 4 பேரும், ரேஷன் அரிசி கடத்தியதாக ஒருவரும் என மொத்தம் 52 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.