மோட்டார்சைக்கிளில் பதுங்கியிருந்த பாம்பு
பதுங்கியிருந்த பாம்பு
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அருகே வஞ்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் துரையரசன் (வயது 45). இவர் நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பள்ளிக்கு சென்றார். பின்னர் பள்ளியில் வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் ஏதோ ஒன்று அசைவது போல் இருந்தது. இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பார்த்தபோது மோட்டார்சைக்கிளில் பாம்பு ஒன்று சுருண்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக அவினாசியை சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான விஜய் மற்றும் கவுதம் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாம்பு பிடிக்கும் வீரர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். அது 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு என்பது தெரியவந்தது. மேலும் அந்த நல்ல பாம்பு படமெடுத்து ஆடியதால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பாம்பை ஆசிரியர் ஒருவர் கையில் பிடித்தபடி பேசும் வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து திருப்பூர் வனத்துறை அதிகாரி செந்தில்குமாரிடம் கேட்டபோது, ஒரு சிலர் தாங்கள் வனத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று தவறான தகவலை பொதுமக்களிடம் பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.