ஆந்திராவில் இருந்து மதுரைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தல்


ஆந்திராவில் இருந்து மதுரைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தல்
x

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு ரெயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

ரெயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபாலுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரது தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று திண்டுக்கல் வழியாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்ற ரெயில்களில் சோதனையிட்டனர்.

அப்போது கச்சகுடாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரெயில், திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலை 3.47 மணிக்கு வந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அந்த ரெயிலில் சோதனையிட்டனர். அப்போது பயணிகள் இல்லாமல் காலியாக இருந்த முன்பதிவில்லாத பெட்டியில் ஒரு பை கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி சோதனையிட்ட போது அதில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. ஆனால் கடத்தி வந்தவர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. அதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story