1¼ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது


1¼ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sept 2023 2:45 AM IST (Updated: 9 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் 1¼ டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்து அரிசி ஆலைகளில் மாவாக மாற்றப்படுவதாக மதுரை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜயகார்த்திக்ராஜூவுக்கு புகார் வந்தது. இதையடுத்து திண்டுக்கல் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகதீசன் மேற்பார்வையில் திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் திண்டுக்கல் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வத்தலக்குண்டு சாலையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் 24 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் திண்டுக்கல் முத்தழகுப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த ஆரோக்கியா ஸ்டீபன் (வயது 37), திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் மணிகண்டன் (46) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வத்தலக்குண்டு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து திண்டுக்கல்லில் உள்ள அரிசி ஆலைகளுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வாகனம், ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story