சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தல்: விமான கழிவறையில் ரூ.46 லட்சம் தங்கம் சிக்கியது
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.46 லட்சம் தங்கம் விமான கழிவறையில் சிக்கியது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் குடியுரிமை சோதனை முடித்து புறப்பட்டனர். பின்னர் சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விமானத்திற்குள் சென்று ஒவ்வொரு இருக்கையாக சோதனை செய்தனர். அதைத்தொடர்ந்து, விமான கழிவறைக்கு சென்று பார்த்தபோது அங்கு கேட்பாரற்று ஒரு பார்சல் கிடந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் ஒரு கிலோ எடை கொண்ட ஒரு தங்கக்கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.46 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கடத்தி வந்தது யார்? கழிவறையில் விட்டு சென்றது ஏன்? பன்னாட்டு விமானமாக வந்த சிங்கப்பூர் விமானம் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக செல்ல இருந்ததை அறிந்து கழிவறையில் வைத்து சென்றார்களா? என விசாரித்து வருகின்றனர்.