மலேசியா, தாய்லாந்து, கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 14 பேர் கைது


மலேசியா, தாய்லாந்து, கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 14 பேர் கைது
x

சென்னை விமான நிலையத்தில் மலேசியா, தாய்லாந்து, கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1½ கோடி தங்கம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து 14 பேரை கைது செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், மலேசியாவில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அனிபா (வயது 32), தாய்லாந்தில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆசிக் (35), இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 11 பேர் கொண்ட குழு ஆகிய 13 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது 13 பேரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 265 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த தமிழகத்தை சேர்ந்த யாசர்(30) என்பவரை சோதித்ததில் அவரிடமிருந்து ரூ.50 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 90 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். ரூ.1 கோடியே 54 லட்சம் தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் 14 பேரையும் கைது செய்து தங்க கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story