அபுதாபியில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது
அபுதாபியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம், லேப்டாப், ஐபோன், சிகரெட்டு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அப்போது அபுதாபியில் இருந்து சென்னை வந்த 4 பயணிகளை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் விலையுர்ந்த 20 ஐபோன்கள், லேப்டாப்கள், சிகரெட்டு பாக்கெட்டுகள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் 4 பேரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்களது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, 4 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 422 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன்கள், லேப்டாப்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் நடத்திய சோதனையில் 4 பயணிகளிடம் இருந்து ரூ.2 கோடியே 8 லட்சம் மதிப்புடைய 3 கிலோ 422 கிராம் தங்கமும் லேப்டாப்கள், சிக்ரெட்டுகள், ஐபோன்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.