சிங்கப்பூர் நாட்டிற்கு கடத்த முயற்சி: சென்னை விமான நிலையத்தில் ரூ.11½ லட்சம் அமெரிக்க டாலா் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.11½ லட்சம் அமெரிக்க டாலா்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நாட்டுக்கு நேற்று விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்ய தயாராக இருந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவருடைய உடைமைகளில் எதுவும் இல்லாததால், தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதித்தபோது, அவரது உள்ளாடைகளுக்குள் கட்டு கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க டாலரை கொடுத்து அனுப்பி சிங்கப்பூரில் உள்ள ஒருவரிடம் கொடுத்து வர சொன்னதாகவும், அதற்காக தனக்கு விமான டிக்கெட் எடுத்து தந்து செலவுக்கு ரூ.3ஆயிரம் கமிஷன் பணம் தந்ததாகவும் கூறினாா். இதையடுத்து பணத்தை கொடுத்து வெளிநாட்டுக்கு கடத்த சொன்ன ஆசாமி யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.