திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானம் ஒன்றில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பயணி ஒருவர் தனது தொடைப் பகுதியில், கால் முட்டிக்கு அணிவிக்கும் 'நீ கேப்' போன்று அணிந்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று அவருடைய உடமைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருடைய தொடைப்பகுதியில் போடப்பட்டிருந்த நீ கேப்பில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. மேலும் அவரது உடைமைகளில் துணிகளுக்கு நடுவில் தங்க சங்கிலிகளை மறைத்து எடுத்து வந்ததும் தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட 1.424 கிலோ தங்கத்தின் சர்வதேச விலை, ஒரு கோடியே 3 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.