அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் - அமைச்சர் சக்கரபாணி
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தின்போது புதிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் 2023 ஆம் ஆண்டு ஐநா சபையால் சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கடைபிடிக்கப்படுவதனை முன்னிட்டு பாரம்பரிய சிறுதானிய உணவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவுத் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் கிடங்கு வளாகத்தில் உள்ள காலி இடத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
அரியலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் தலா 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்குகள் மொத்தம் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட நிதியின் கீழ் அமைக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.