கோவை போலீசார் குறித்து அவதூறு வீடியோ: பெண் மீது வழக்குப்பதிவு


கோவை போலீசார் குறித்து அவதூறு வீடியோ: பெண் மீது வழக்குப்பதிவு
x

கோவை போலீசார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் விஸ்வதர்ஷினி (வயது 44). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு சிறுமியையும், நடிகர் விஷாலையும் இணைத்து அவதூறு கருத்துகளை யூடியூப்பில் பதிவிட்டு இருந்தார். இது குறித்து சென்னை ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விஸ்வதர்ஷினியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் தனியார் தொலைக்காட்சியில் புழல் சிறை குறித்து அவதூறாக பேசி இருந்தார். இதையடுத்து கோவை துடியலூர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட போது விஸ்வதர்ஷினி அங்கு பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக கடந்த ஆண்டு துடியலூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே விஸ்வதர்ஷினி செல்வபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் விஸ்வதர்ஷினி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னதாக அவர் கோவை போலீசார் குறித்து அவதூறாக பேசும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜா அளித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் விஸ்வதர்ஷினி மீது மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story