சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா


சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரி விழா

ஆண்டுக்கு ஒரு முறை 9 கோள்களும் ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில் வரும் நாள் மகா சிவராத்திரி எனவும், சிவபெருமான் சிவலிங்கமாக காட்சியளித்த நாள் மகா சிவராத்திரி எனவும் குறிப்பிடப்படுகிறது. மகா சிவராத்திரி நாளில் சிவவழிபாடு மேற்கொண்டால் ஆண்டுதோறும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும்.

மேலும் இந்த நாளில் உடலில் உள்ள குண்டலினி சக்தி தூண்டப்படுவதாக நம்பிக்கை உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை விடிய, விடிய விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கோவில்களில் நாட்டியாஞ்சலி உள்பட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

காயாரோகணர் கோவில்

நாகையில் உள்ள காயாரோகணசாமி நீலாயதாட்சியம்மன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள உள்ள 12 சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி நாளில் வழிபட்டால், ஜோதிர்லிங்க தரிசனத்துக்கு இணையான பலன் கிடைக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. மகா சிவராத்திரி நாளில் 4-ம் கால பூஜையில் நாகையில் காயாரோணசாமியை ஆதிசேஷன் வழிபட்டதாக ஐதீகம்.

இந்த நிலையில் நாகை காயாரோகணசாமி கோவில், அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், மலையீஸ்வரன் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், வீரபத்திர சுவாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில்.

வடக்கு பொய்கை நல்லூர்

வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், காங்கேய சித்தர் பீடம், அந்தணப்பேட்டை அண்ணாமலையார் கோவில், எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடந்தது.

இதையொட்டி இரவு 8.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முதல்கால பூஜையும், 10.30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் 2-ம் கால பூஜையும், இரவு 12.30 மணிக்கு மேல் அதிகாலை 2.30 மணிக்குள் 3-ம் கால பூஜையும், அதிகாலை 2.30 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் 4-ம் கால பூஜையும் நடந்தது. அப்போது சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகூர் நாகநாதசாமி

நாகூரில் ராகு, கேது தலமாக விளங்கும் திருநாகவல்லி சமேத நாகநாதசாமி கோவில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையொட்டி சக்தி நாட்டிய வித்யாலயா மாணவிகளின் பரதநாட்டியம், சின்மயா வித்யாலயா மாணவர்களின் பக்திப்பாடல்கள், பரதநாட்டியம், காரைக்கால் சுக.பாலவலன் வயலின், இதயராகம் இன்னிசைக்குழுவினரின் பக்தி மற்றும் கிராமிய இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வரசித்தி விநாயகர் சேவைக்குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

சிக்கல்

நாகை மாவட்டம் கீழ்வேளூர், சிக்கல் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அட்சயலிங்க சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி கோவிலின் உள் பிரகாரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் பூமிநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தேவூர் தேவபுரீஸ்வரர் கோவில், சிக்கல் பார்வதீஸ்வரர் கோவில் மற்றும் குற்றம்பொருத்தானிருப்பு, சங்கமங்கலம், பழையனூர் பொரவச்சேரி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது. கீழ்வேளூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று 108 பால் குட ஊர்வலம் நடந்தது. அப்போது பக்தர்கள் பால் குடங்களுடன் அட்சயலிங்க சாமி கோவிலில் இருந்து புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.


Next Story