டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் - அரசு விழாவாக கொண்டாட்டம்-மணிமண்டபத்தில் அமைச்சர் மரியாதை


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் - அரசு விழாவாக கொண்டாட்டம்-மணிமண்டபத்தில் அமைச்சர் மரியாதை
x

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை ஒட்டி, திருச்செந்தூரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.


திருச்செந்தூர்:

பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து, முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், வீரபாண்டியன் பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் திறக்கப்பட்டது.

மேலும் அவரது பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

அரசு சார்பில் தாசில்தார் சுவாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் நிலஅளவையர், பணியாளர்கள் உடன் இருந்தனர். அதன்படி மணி மண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழிரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, பேரூராட்சி தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சந்தையடியூர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்தனர்.


Next Story