சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி அதிகாரம் பறிப்பு; கலெக்டர் அதிரடி


சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி அதிகாரம் பறிப்பு; கலெக்டர் அதிரடி
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய பணிகள் நடப்பது இல்லை என்று புகார் எழுந்ததை தொடர்ந்து சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி, துணைத்தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து கலெக்டர் துரை ரவிச்சந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தென்காசி

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக முத்துமாரி என்பவரும், துணைத்தலைவராக பட்டுராஜ் என்பவரும் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவி, துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து ஒற்றுமை இன்றி ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம்சாட்டியபடி இருந்ததால், ஊராட்சி மன்ற கூட்டமானது நடைபெறாமல் பொதுமக்களுக்கு தேவையான எந்தவிதமான அத்தியாவசிய பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்ததாக புகார் எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீவநல்லூர் பகுதியில் கடுமையான தண்ணீர் பிரச்சினை நிலவுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செங்கோட்டை-இலத்தூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர். எனினும் அந்த நடவடிக்கையானது தற்காலிகமாகவே இருந்த காரணத்தால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் புகார்கள் அளித்து வந்தனர்.

இந்த நிலையில், சீவநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக, பஞ்சாயத்து தலைவி முத்துமாரி, துணைத்தலைவர் பட்டுராஜ் ஆகியோரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செங்கோட்டை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கியும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story