சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை - உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுப்பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் 3 லட்சம் பேர் நேரடியாகவும், 8 லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு 70 சதவீதம் அளவுக்கு மட்டுமே பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன.
இதேபோல் 70 சதவீதம் தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது. மேலும் இந்த ஆண்டு பட்டாசு விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்தது. நடப்பு ஆண்டு சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு தான் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பட்டாசு விற்பனை மிகவும் வீழ்ச்சி அடைந்திருந்தது.
இந்த ஆண்டு கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததால் பட்டாசு விற்பனை அதிகரித்தது. தீபாவளியை முன்னிட்டு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன. இதனால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் மகராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் விற்பனையாகி உள்ளது. அங்கு அனுப்பப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையாகிவிட்டன.
தமிழகத்தில் சென்னையில் மட்டும் ரூ.150 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற பட்டாசு விற்பனை தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கணேசன் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பட்டாசுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததால் அதிகளவு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன. இந்த ஆண்டு ரூ.6ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் வர்த்தகம் நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
பட்டாசு கடைகள் சங்கம் பொதுச்செயலாளர் இளங்கோவன் கூறியதாவது:-
இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்காத வகையில் அதிகமாக விற்பனை நடந்துள்ளது. ஏற்கனவே இருப்பு இருந்த பட்டாசுகளும் விற்பனையாகி உள்ளன. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவர்கள் வரும் ஆண்டில் மேலும் அதிக அளவில் பட்டாசு உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.