சிவகாசி மாநகராட்சி கூட்டம்
சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநகராட்சி கூட்டம்
சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று காலை மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் முன்னிலை வகித்தார். இதில் கமிஷனர் சங்கரன், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கான அனுமதி உள்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-
கவுன்சிலர் அசோக்குமார்:- மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிவகாசி பஸ் நிலையம் எதிரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இதில் எங்கள் சமூக மக்கள் சார்பில் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு பயன்படுத்தி வந்த இடத்தையும் அகற்றபோவதாக அதிகாரிகள் பேசிக் கொள்கிறார்கள். அந்த இடத்தை அகற்ற வேண்டாம்.
ஆக்கிரமிப்பு
தங்கபாண்டிசெல்வி:- 70 ஆண்டுகளாக எங்கள் முன்னோர்கள் இந்த பகுதியை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது திடீரென அது ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்ற முயற்சி நடக்கிறது. இந்த இடத்துக்கு பட்டா வழங்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
சேவுகன்: அப்பகுதி மக்கள் ஈமசடங்கு செய்ய வசதியாக அதே பகுதியில் 10 சென்ட் நிலம் ஒதுக்கி தர வேண்டும். பொத்தமரத்து ஊருணியின் வடக்குபகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
சசிகலா: 48-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மண்ரோடுகள் உள்ளது. இதனை தார் சாலையாக மாற்றி தர வேண்டும்.
சேதுராமன்: 7-வது வார்டு பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியே செல்ல தேவையான வாருகால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
ரேஷன்கடை
ஜெயராணி: 47-வது வார்டு பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மகேஸ்வரி: 36-வது வார்டுக்கு உட்பட்ட காத்தன்தெருவில் வாருகால் சேதம் அடைந்து உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.