சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலகம்
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்துக்கான புதிய கட்டிடம் சாத்தூர் ரோட்டில் ரூ.15 கோடி செலவில் கட்ட அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்துக்கான புதிய கட்டிடம் சாத்தூர் ரோட்டில் ரூ.15 கோடி செலவில் கட்ட அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சி உருவாக்கப்பட்டது. ஒரு வருடம் முடிந்த நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் மாநகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் போதிய வசதிகள் இல்லாத நிலையில் மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கான இடம் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. அப்போது சாத்தூர் ரோட்டில் மாநகராட்சி அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக தினத்தந்தியில் செய்தி வெளியானது.
ஒப்புதல்
அதனைத்தொடர்ந்து பொதுமக்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள், கவுன்சிலர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சாத்தூர் ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய மாநகராட்சி அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய அலுவலகத்தில் வணிக வளாகமும் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வணிக வளாகம் மூலம் மாநகராட்சிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. புதிய மாநகராட்சி அலுவலகம் கட்ட தேவையான ஒப்புதல் பெற மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி செய்தனர். அதன் பலனாக தற்போது புதிய மாநகராட்சி அலுவலகம் கட்ட அனுமதியும், நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.15 கோடியில் கட்டிடம்
சிவகாசி-சாத்தூர் ரோட்டில் ரூ.10 கோடி செலவில் பல்வேறு நவீன வசதிகளுடன் 3 மாடி கட்டிடமாக மாநகராட்சி அலுவலகமும், ரூ.5 கோடி செலவில் வணிக வளாகமும் கட்ட அரசு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 3 ஏக்கர் இடத்தில் அமையும் இந்த கட்டிடத்தில் நவீன வசதிகளுடன் வாகனங்கள் நிறுத்தம் அமைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நகரின் மையப்பகுதியில் பஸ் நிறுத்தம் அருகில் அமைய உள்ள புதிய மாநகராட்சி அலுவலக கட்டுமான பணி அடுத்த மாதம் தொடங்கும் என்றும், அதற்கு முன்னர் அந்த பகுதியை சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.