பெற்றோர்களுடன் சாலையில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் திடீர் மறியல்


பெற்றோர்களுடன் சாலையில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் திடீர் மறியல்
x

அம்பை அருகே புதிய வகுப்பறை கட்டிடத்தை விரைந்து கட்டித்தர வலியுறுத்தி பெற்றோர்களுடன் சாலையில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் நேற்று திடீர் மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அருகே புதிய வகுப்பறை கட்டிடத்தை விரைந்து கட்டித்தர வலியுறுத்தி பெற்றோர்களுடன் சாலையில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் நேற்று திடீர் மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரத்தடியில் நடக்கும் வகுப்புகள்

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மன்னார்கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் போதிய வகுப்பறைகள் இல்லாததால், குறிப்பிட்ட வகுப்பறைகளிலும், மரத்தடியிலும் மாறி மாறி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மாணவர்கள் சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அவர்கள் அம்பை-தென்காசி சாலையில் மன்னார்கோவில் விலக்கு பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார், தாசில்தார் சுமதி, இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் புதிய கட்டிடத்தை விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் மாணவர்கள் வகுப்புகளுக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story