சீதை-ராமர் திருக்கல்யாணம்; தேங்காய்களை போட்டி போட்டு ஏலம் எடுத்த பக்தர்கள்


சீதை-ராமர் திருக்கல்யாணம்; தேங்காய்களை போட்டி போட்டு ஏலம் எடுத்த பக்தர்கள்
x

சீதை-ராமர் திருக்கல்யாணத்தை தொடர்ந்து, தேங்காய்களை பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

திருச்சி

சமயபுரம்:

இலங்கையில் நடைபெற்ற போரில் ராமர், ராவணனை வென்று சீதையை அங்கிருந்து அழைத்துக்கொண்டு அயோத்திக்கு சென்றபோது, மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 94.கரியமாணிக்கம் கிராமத்தில் இளைப்பாறுவதற்காக தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையன்று இந்த கிராமத்தில் சீதை-ராமர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த நிகழ்ச்சியையொட்டி காலையில் ஹோமங்கள் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சீதை-ராமர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலை மாற்றுதல் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சாமிக்கு படைக்கப்பட்ட தேங்காய்களை வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து அதை சாப்பிட்டால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நினைத்தது நடக்கும், சகல சவுபாக்கியங்களும் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி சாமிக்கு படைக்கப்பட்ட 7 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இதில் அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.7,500-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,700-க்கும் ஏலம் போனது. 7 தேங்காய்களும் மொத்தம் ரூ.30 ஆயிரத்து 300-க்கு ஏலம் போனது. தேங்காய்களை பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.


Next Story