அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் காலை மற்றும் மதியம் என சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது. இங்கு 3,800 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை மாணவர்கள் திடீரென கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்கள் கூறியதாவது:-
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இந்த கல்லூரி உள்ளது. கடந்த சில வருடங்களாக பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் குறித்த நேரத்தில் வருவதில்லை. மேலும் தேர்வு முடிவுகள் பல்வேறு குளறுபடிகளுடன் வெளியிடப்பட்டு வருகிறது.
கல்வி உதவித்தொகை
கடந்த மே மாதத்திற்கான தேர்வு முடிவுகள் பலமுறை வெளியிடப்பட்டும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மாறுபாடாக உள்ளது. மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு சரியான முடிவுகள் வழங்கப்படவில்லை. இந்த முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாகவே வரும் தேர்வுக்கான தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு பேப்பர் கட்டணம் 90 ரூபாயில் இருந்து 110 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கணினி பதிவு கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. உயர்த்தப்பட்ட தேர்வு பேப்பர் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும், கல்வி உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும், கணினி பதிவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மாணவர்களின் தேர்வு முடிவுகளில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.