4¾ ஆண்டுகளை கடந்தும் நிறைவடையாத சிறுவாச்சூர் மேம்பால பணிகள்
4¾ ஆண்டுகளை கடந்தும் சிறுவாச்சூர் மேம்பால பணிகள் நிறைவடையாததால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரகாளியம்மன் கோவில்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலுக்கு மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வந்து செல்லும் பக்தர்களும், வணிகரீதியாக சிறுவாச்சூர் வந்து செல்லும் சுற்றியுள்ள கிராம மக்களும் சாலையை கடக்கும்போது, தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிர் பலி ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற மத்திய அரசு சிறுவாச்சூர் பகுதியில் தரைவழி மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கி ரூ.13.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
மேம்பாலம் அமைக்கும் பணி
இதனைதொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி சிறுவாச்சூரில் தரைவழி மேம்பாலம் அமைப்பதற்கு அப்போதைய மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். இந்த பாலம் 12 மீட்டர் அகலம், 5.50 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு (சர்வீஸ்) சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. சாலையின் இருபுறமும் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. பின்னர் மேம்பாலம் கட்டுமான பணிகள் ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டது. பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கியது.
4¾ ஆண்டுகளை கடந்தும்...
இதையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் மீண்டும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கின. தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடிக்கல் நாட்டு விழாவின்போது ஒரு ஆண்டிற்குள் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று கூறப்பட்டது.
ஆனால் 4¾ ஆண்டுகளை கடந்தும் இன்னும் மேம்பாலம் கட்டுமான பணிகள் நிறைவடையாததால் இணைப்பு சாலையில் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் ஆமைபோல் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
பால் வாகன டிரைவர் முத்துகுமார்:- மேம்பால கட்டுமான பணிகள் நிறைவடையாததால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முயவில்லை. தினசரி சிறுவாச்சூரை கடந்து செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 20 நிமிடம் ஆகிறது. அந்த அளவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை மாலை முதலே சென்னையில் இருந்து அதிகளவு வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து வரும். இதேபோல் ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் சென்னை செல்வதற்காக தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவு வாகனங்கள் வரும். இதனால் இந்த சாலையை கடக்க குறைந்தப்பட்சம் 1 மணி நேரம் ஆகி விடுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிறுவாச்சூரில் கடந்து செல்வதற்கு படாதபாடு படுகின்றனர். சாலையின் இருபுறமும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதையும் காணமுடியும். அந்த நேரத்தில் ஆம்புலன்சு கூட செல்ல முடியாது. இதற்கு பிறகு தொடங்கப்பட்ட திருச்சி மாவட்டம், சிறுகனூரில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சிறுவாச்சூர் மேம்பால பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைந்து முடிக்க வேண்டும்
சிறுவாச்சூரை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் மதிச்செல்வன்:- விடுமுறை நாட்களில் இந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் விபத்துகளும் அவ்வப்போது ஏற்படுகின்றன. எனவே இன்னும் அதிகளவிலான தொழிலாளர்களை கொண்டு இரவு, பகல் பாராமல் பணி செய்து விரைந்து மேம்பால கட்டுமான பணியை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து பாதிப்பு
சிறுவாச்சூரை சேர்ந்த மேடை அமைப்பாளர் தீபன்:- மேம்பால கட்டுமான பணிகள் நிறைவடையாததால் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மிகுந்த சிரமத்துடன் வருகின்றனர். கோவில் நடை திறக்கும் திங்கள், வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, விஷேச நாட்களில் சிறுவாச்சூரில் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விடுகிறது. சிறுவாச்சூரில் பிரதி வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை மற்றும் வாரச்சந்தை நடைபெறும் போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. தற்சமயம் மேம்பாலத்தின் கீழ் தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் வந்து செல்வதற்கு பாதை திறக்கப்பட்டுள்ளது. அதிலும் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. சிறுவாச்சூரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளன. இந்த பள்ளிகளுக்கு மேம்பாலத்தின் கீழ்ப்புற பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் சாலையை கடந்து வந்து செல்வதற்கு உயிரை கையில் பிடித்து கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டிலாவது சிறுவாச்சூர் மேம்பால பணிகள் முடித்து விட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மே மாதத்தில் மேம்பால பணிகள் நிறைவடையும்
அதிகாரிகள் தகவல்
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சிறுவாச்சூர் மேம்பால பணிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதம் ஆகியது. மேலும் ஒப்பந்ததாரர்கள் ஏதோ காரணங்களால் மாறிக்கொண்டே இருந்தனர். பணிகளுக்கு மண் சரியாக கிடைக்கவில்லை. தற்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிந்து பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற மே மாதத்திற்குள் சிறுவாச்சூர் மேம்பால பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்து விடும், என்றனர்.