ஒற்றைத் தலைமை விவகாரம்: மாஃபா பாண்டியராஜன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சென்னை
அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என வலியுறுத்தியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்ட செயலாளர் சையது கான், சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் அசோகன், திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெள்ளமண்டி நடராஜன் , தஞ்சாவூர் தெற்கு வைத்தியலிங்கம், வடக்கு சுப்ரமணி, பெரம்பலூர் ராமச்சந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆகிய மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே தற்போது ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர்.
இதுவரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயாலளர் தச்சை கணேஷ ராஜா மற்றும் விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அலெக்சாண்டர் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று ஆதரவளித்துள்ளனர். இதனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து ஆதரவு குறைந்து வருகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.