பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டில் ரூ.60 லட்சம் கொள்ளை
பிரபல சினிமா பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் மகன் பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம்-வைர நகைகள் மர்மமான முறையில் கொள்ளை போய் விட்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பிரபல சினிமா பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசின் மகன் விஜய் ஜேசுதாசும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களில் பின்னணி பாடி புகழ் பெற்றவர். படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் தனுசுடன் மாரி படத்தில் நடித்துள்ளார். விஜய் ஜேசுதாஸ் சென்னை அபிராமபுரம், 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் வசிக்கிறார். அவரது மனைவி தர்ஷனா, நேற்று முன்தினம் இரவில் சென்னை அபிராமபுரம் போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
ரூ.60 லட்சம் நகைகள் கொள்ளை
அந்த புகார் மனுவில், வீட்டில் உள்ள நம்பர் பாதுகாப்பு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க-வைர நகைகள் காணாமல் போய் விட்டதாகவும், கண்டுபிடித்து தரும்படியும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அபிராமபுரம் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர். உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த் போலீஸ் படையுடன் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.
நகைகள் கொள்ளை போனதில் வேலைக்காரர்கள் யாருக்கும் தொடர்பு இருப்பதாக புகாரில் கூறவில்லை. பாஸ்வேர்டு நம்பர் தெரியாமல் நகைகள் இருந்த லாக்கரை யாரும் திறக்கவும் முடியாது, உடைக்கவும் முடியாது. எனவே வெளியில் இருந்து யாரும், லாக்கரை திறந்து நகைகளை அள்ளிச் சென்றிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
ஒரு மாதம் கழித்து புகார்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி, லாக்கரில் நகைகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கடைசியில் லாக்கரை திறந்து பார்த்தபோது, நகைகள் காணாமல் போய்விட்டது தெரிய வந்ததாகவும், ஆனால் ஒரு மாதம் கழித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது, என்றும் போலீசார் கூறினார்கள்.
பாடகர் விஜய் ஜேசுதாஸ் துபாயில் இருப்பதாகவும், அவர் சென்னை வந்த பிறகு, அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் இந்த வழக்கில் அடுத்த கட்ட நகர்வு இருக்கும், என்றும் போலீசார் கூறினார்கள். புகார் கொடுத்த பாடகர் விஜய் ஜேசுதாசின் மனைவி தர்ஷனா வீட்டில் தனியாக இருப்பதால், அவரிடம் உரிய விசாரணை நடத்தவில்லை, என்றும் போலீசார் மேலும் கூறினார்கள்.
அடுத்த பரபரப்பு வழக்கு...
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் திருட்டுபோன விவகாரம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டு கொள்ளை பிரச்சினை வெளியே வந்துள்ளது.
இந்த வழக்கும் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.