நடிகர் கார்த்திக்குமார் குறித்து பேச பாடகி சுசித்ராவுக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு
சுசித்ராவிடம், கார்த்திக்குமார் 1 கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சென்னை,
பிரபல பின்னணி பாடகி சுதித்ரா. இவரது கணவர் நடிகர் கார்த்திக்குமார். இவர்கள் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர்.
இந்தநிலையில், அண்மையில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்த சுதித்ரா, கார்த்திக்குமார் குறித்து பல கருத்துக்களை தெரிவித்தார். அவரது திரைமறைவு நடவடிக்கை என்று பல சம்பவங்கள் குறித்து கூறினார்.
இதையடுத்து, சுசித்ராவிடம், கார்த்திக்குமார் 1 கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், ''சுசித்ராவின் பேட்டி, சமுதாயத்தில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. என்னைப்பற்றியும், என்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, கார்த்திக்குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி சுசித்ராவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 1-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.