சிறையில் மகனுக்கு சிம்கார்டுகொடுக்க முயன்ற பெண் சிக்கினார்
சிறையில் மகனுக்கு சிம்கார்டு கொடுக்க முயன்ற பெண் சிக்கினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குண்டர் சட்டம்
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவருடைய மகன் பிரேம்குமார் (வயது 26). வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் உள்ளார். இவரது தாய் தனலட்சுமி மற்றும் உறவினர் குணசீலன் ஆகிய 2 பேர் நேற்று பிரேம்குமாரை பார்ப்பதற்காக சிறைக்கு சென்றனர்.
அப்போது சிறைத்துறை போலீஸ் ஏட்டு பூபதி, தனலட்சுமி வைத்து இருந்த உடமைகளை பரிசோதனை செய்தார். பிரேம்குமாருக்கு கொடுப்பதற்காக தனலட்சுமி வைத்திருந்த சட்டை பையில் சிம்கார்டு, மெமரி கார்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து சிறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வினோத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர் தனலட்சுமி, குணசீலன், கைதி பிரேம்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் 3 பேர் மீது அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கூடுதல் சூப்பிரண்டு வினோத்திடம் கேட்ட போது கைதி பிரேம்குமார் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு செல்போன் எதுவும் இல்லை. பின்னர் பிரேம்குமாரிடம் விசாரித்த போது அவர் சிம் கார்டு, மெமரி கார்டு கொண்டு வர சொல்லவில்லை என்று கூறுகிறார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.