கோயம்பேடு பெருநகர வளர்ச்சி குழும அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணியை கட்டி மவுன போராட்டம்
கோயம்பேடு பெருநகர வளர்ச்சி குழும அலுவலகம் முன்பு பொதுமக்கள் வாயில் கருப்பு துணியை கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 525 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதில் ஏராளமான பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி வீடுகளை வாங்கி உள்ளனர். தற்போது அந்த வீடுகளுக்கான முழுபணத்தை செலுத்தி முடித்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதற்கான வீட்டின் பத்திரங்களை கொடுக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறி நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோயம்பேட்டில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணியை கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மற்றும் கோயம்பேடு போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.