கடல் போல் காட்சி அளிக்கும் சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகள்
சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகள் கடல் போல் காட்சி அளிக்கிறது.
சென்னை நகர மக்களின் தாகம் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரி வறண்ட காலங்களில் சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்த்தது சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் தேக்கிவைத்த மழை நீர்தான். தற்போது சிக்கராயபுரம் கல்குவாரியில் உள்ள குட்டைகளில் மழைநீர் முழுவதுமாக நிரம்பி அங்குள்ள 25 குட்டைகளும் கடல் போல் ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது.
வரும் பருவமழையின் போது சிக்கராயபுரம் கல்குவாரியில் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது மிதவை மோட்டார் மூலம் சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து சென்னை மக்களுக்கு தண்ணீர் எடுக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது இந்த கல்குவாரியில் தண்ணீர் எடுப்பது 3-வது முறையாக நடைபெற்று வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் வறண்டு போன நிலையில் சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகர மக்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு பெரிய நீர்த்தேக்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு 25 குட்டைகளுக்கும் ஒவ்வொன்றுக்கும் இணைப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த முறை பெய்த மழை நீர் அனைத்தும் கல்குவாரிக்கு திருப்பி விடப்பட்டதால் தற்போது முழுவதுமாக நிரம்பி உள்ளது.
மேலும் பருவமழை தொடங்க உள்ள நிலையில் கல்குவாரி நிரம்பி விட்டதால் மேலும் தண்ணீர் அதிக அளவில் வந்தால் கல்குவாரி முழுவதுமாக நிரம்பி வெள்ள அபாயம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து குடிநீர் தேவைக்காக நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் முதல் 1½ கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
25 குட்டைகளில் 8-வது குட்டையில் மிதவை எந்திரம் மூலம் 600 குதிரை திறன் கொண்ட ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சிக்கராயபுரம் கல்குவாரியில் 2½ கோடி லிட்டர் முதல் 3 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்க முடியும் என்றும் தற்போது அனைத்து குட்டைகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் 400 மில்லியன் கன அடி நீர் தற்போது தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை விட 100 மில்லியன் கன அடி அதிகமாக உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு, 2019-ம் ஆண்டு தற்போது என 3-வது முறையாக கல்குவாரி குட்டையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
வரும் பருவ மழையை கருத்தில் கொண்டும், வெள்ள அபாயம் ஏற்படாமல் இருக்கவும் தொடர்ந்து 4 மாதங்களுக்கு சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தொடர்ந்து நீர் எடுப்பதால் கல்குவாரியில் இருந்து பருவமழைக்குள் நீரின் அளவு குறைந்து விடும். அதன் பிறகு வரும் மழை நீரை முழுவதுமாக தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அள்ள அள்ள குறையாமல் சிக்கராயபுரம் கல்குவாரி சென்னை மக்களின் தீர்க்கும் நிலையில் எந்தவித செலவும் இன்றி இலவச குடிநீர் தேக்கமாக இருப்பது வரவேற்க கூடியது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.