போலீஸ் நிலையத்தை ரேஷன்கடை பணியாளர்கள் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு


போலீஸ் நிலையத்தை ரேஷன்கடை பணியாளர்கள் முற்றுகை  விருத்தாசலத்தில் பரபரப்பு
x

விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை ரேஷன் கடை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 59). இவர் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவராகவும், பூதாமூர் ரேஷன் கடையில் விற்பனையாளராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள ரேஷன் கடையில், பணியில் இருந்த விற்பனையாளரிடம் தங்கராசு பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ரேஷன் கடை கட்டிடத்தின் உரிமையாளரான மணிகண்டன், தங்கராசுவிடம் தகராறில் ஈடுபட்டதோடு, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதுகுறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்கராசு மற்றும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் நேற்று விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து ரேஷன் கடைகளையும் அடைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story