திசையன்விளை போலீஸ் நிலையம் முற்றுகை
திசையன்விளை போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை வடக்குதெரு சுடலை ஆண்டவர் கோவில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் இரவு கோவில் முன்பு அன்னதானம் நடைபெற்று வருகிறது. அன்னதானத்தின் போது திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் செல்வராஜ் (வயது 29), மணிகண்டன் (27) மற்றும் சிலர் அங்கு இருந்த மேஜை நாற்காலிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட கோவில் நிர்வாகி சேம்பர்செல்வராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், மேலும் பா.ஜனதா நிர்வாகி முருகனை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கொடுத்த புகாரின்பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், செல்வராஜ் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர்.
இந்த நிலையில் இவர்களுடன் சேர்ந்து தகராறு செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று இரவு பா.ஜனதா நிர்வாகி முருகனின் உறவினர்கள் திசையன்விளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.