விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதியில் ரெயில்வே நிர்வாகம் கையகப்படுத்திய கோவில் நிலத்திற்கான இழப்பீட்டு தொகையை பொது பயன்பாட்டிற்காக வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட வைக்கப்பட்டுள்ள இழப்பீட்டை உரிய விசாரணை மேற்கொண்டு சாலாமேடு பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அவர்களிடம் இருந்து மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.