பராமரிப்பு இன்றி புதர் மண்டி கிடக்கும் பூங்காக்கள்
பராமரிப்பு இன்றி புதர் மண்டி கிடக்கும் பூங்காக்கள்
நாகப்பட்டினம்:
நாகை நெய்தல் நகரில் பராமரிப்பு இன்றி புதர் மண்டி கிடக்கும் பூங்காக்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 பூங்காக்கள்
நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் பல லட்சம் மதிப்பில் 10-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக நெய்தல் நகரில் 4 பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இந்த பூங்காக்களில் அழகிய மலர் செடிகள், புல்தரை, நடைபாதை, மின்விளக்குகள், சிறுவர்களுக்கான சறுக்குமரம், ஊஞ்சல், விலங்குகளின் முழு உருவ பொம்மைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இந்த பூங்காக்களை நெய்தல் நகரில் உள்ள பொதுமக்களும், குழந்தைகளும் பயன்படுத்தி வந்தனர். காலை, மாலை வேளைகளில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
புதர்மண்டி கிடக்கும் பூங்காக்கள்
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூங்காக்கள் பராமரிப்பு இன்றி புதர்மண்டி கிடக்கிறது. மேலும் விளையாட்டு உபகரணங்களும் பழுதாகின.
தற்போது இந்த பூங்காவில் உள்ள சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊஞ்சலின் கம்பிகளும் அறுக்கப்பட்டுள்ளது.
பூங்காக்களில் பொதுமக்களை கவருவதற்காக வைக்கப்பட்டிருந்த சிங்கம், மீன் உள்ளிட்ட பொம்மைகளும் உடைக்கப்பட்டு உள்ளன. சில பூங்காக்கள் பூட்டியே கிடக்கின்றன.
இது தவிர இரவு நேரங்களில் சிலர் மது குடித்து விட்டு பூங்காவில் மது பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் மது பாட்டில்களாக காட்சியளிக்கிறது. மேலும் கழிவறை வசதியுடன் கூடிய சில பூங்காக்களும் கதவு உள்ளிட்ட கட்டிடங்கள் உடைக்கப்பட்டு அவல நிலையில் காட்சியளிக்கிறது.
பயன்பாட்டிற்கு விட வேண்டும்
எனவே பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் நாகை நெய்தல் நகர் பூங்காக்களை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.