ஆன்லைனில் பொருட்கள் இருப்பு காண்பிக்கிறது; நேரில் கேட்டால் இல்லை என்கிறார்கள்:ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
எஸ்.புதூர் அருகே உள்ள கட்டுகுடிபட்டி ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே உள்ள கட்டுகுடிபட்டி ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ரேஷன்கடை
எஸ்.புதூர் ஒன்றியம், கட்டுகுடிபட்டியில் உள்ள சுமார் 900 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன்கடை கட்டுகுடிபட்டி குடியிருப்பு பகுதியில் உள்ளது. இந்த நிலையில் அந்த கட்டிடம் சேதமடைந்த நிலையில் ரேஷன் கடை தற்காலிகமாக கட்டுகுடிபட்டி செட்டி ஊருணி கரையில் உள்ள புதுவாழ்வு திட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொருட்கள் முறையாக வழங்குவது இல்லை என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் உருவாகி இருந்தது. இந்த நிலையில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பொதுவினியோக திட்ட அப்ளிகேசன் மூலம் தங்கள் பகுதி ரேஷன் கடை இருப்பு நிலையை ஆன்லைன் மூலமாக அறிந்து ரேஷன் கடைக்கு சென்றனர்.
முற்றுகை
ரேஷன் கடையில் பொருட்கள் கேட்ட போது இருப்பு இல்லை என விற்பனையாளர் கூறியதாக தெரிகிறது. இதனால் அங்கு பொதுமக்களுக்கும் விற்பனையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆன்லைன் மூலம் இருப்பு நிலையை அறியும் போது கடையில் பொருட்கள் இருப்பு இருப்பதாகவும், ஆனால் கடையில் வினியோகம் செய்ய பொருட்கள் இல்லை என கூறுவதை கண்டித்து பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ரேஷன் கடையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் குடிமை பொருள் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மேலும் அரசு விற்பனை செய்ய சொன்ன விலையைவிட சில பொருட்களை விலை உயர்த்தி விற்பனை செய்ததாகவும், வாங்காத பொருட்கள் வாங்கியதாக குறுந்தகவல் வருவதாகவும் கூறி அங்கு வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற தவறுகள் இனி நடைபெறாது என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் மீண்டும் குடியிருப்பு பகுதியிலேயே புதிய ரேஷன்கடை கட்டிதரவும் கோரிக்கை வைத்தனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.