அரசு மாதிரி பள்ளியில் சேர்க்க வேண்டும்


அரசு மாதிரி பள்ளியில் சேர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:48 AM IST (Updated: 16 Jun 2023 12:51 PM IST)
t-max-icont-min-icon

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு மாதிரிபள்ளியில் சேர்க்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

160 மாணவ- மாணவிகள் தேர்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மூலம் அரசு மாதிரி பள்ளியில் 2023 -24-ம் கல்வியாண்டில் 160 மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான பெற்றோர் கூட்டம் ஆற்காடு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாதிரிபள்ளிக்கு தேர்வான மாணவ- மாணவிகளிடம் கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவ- மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெற்று போட்டி தேர்வுகளிலும் தேர்வாகி உள்ளனர். நடப்பாண்டில் பிளஸ்-1, மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி படிப்புகளில் தலா 120 மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாதிரி பள்ளிக்கு...

ஆற்காடு சக்கரமல்லூர் ஊராட்சியில் தனியார் பள்ளியில் தற்காலிகமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் தங்கும் வசதியுடன் நிரந்தரமாக மாதிரி பள்ளி ராணிப்பேட்டையில் இயங்கும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக பயிற்சி, தங்கும் விடுதி, உணவு வசதிகள் உள்ளிட்டவை மாணவ-மாணவி களுக்கு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மாணவ- மாணவிகள் சிறப்பான முறையில் கல்வி பயின்றுள்ளனர். பெற்றோர்கள் தயக்கமின்றி தங்கள் பிள்ளைகளை அரசு மாதிரி பள்ளிக்கு அனுப்ப வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்கள், மகளிர், விவசாயிகள், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், மாணவ- மாணவிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அந்த திட்டங்கள் அனைத்தும் தகுதியான பயனாளிகளை சென்றடைந்து முழுமை அடைந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மாநில அரசு மாதிரி பள்ளி ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக்) விஜயகுமார், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பழனி, பள்ளி துணை ஆய்வாளர் வெங்கடேசன், தாசில்தார் வசந்தி, தலைமையாசிரியர் பிச்சைக்காரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story