பள்ளிப்பட்டு தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர்கள் பற்றாக்குறை - காலியான இடங்களை நிரப்பாததால் பொதுமக்கள் அவதி
பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள மொத்தமுள்ள 33 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களில் 20 பணியிடங்கள் காலியாக நிரப்பப்படாமல் இருப்பதால் தேவையான சான்றிதழ்களை பெறுவதில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய இரண்டு பிர்காக்கள் உள்ளன. இதில் பள்ளிப்பட்டு பிர்காவில் 17 கிராம நிர்வாக அலுவலர்களும், பொதட்டூர் பேட்டை பிர்காவில் 16 கிராம நிர்வாக அலுவலர்களும் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது பள்ளிப்பட்டு பிர்காவில் உள்ள 17 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதிலாக வெறும் 7 கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
மீதமுள்ள 10 கிராம நிர்வாக பணி இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் பொதட்டூர்பேட்டை பிர்க்காவில் உள்ள 16 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 6 கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 10 கிராம நிர்வாக பணி இடங்கள் காலியாக உள்ளன. இதனால் கிராம நிர்வாக அலுவலகங்கங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்பட பல சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்களையே கிராமப்புற மக்கள் நாட வேண்டியுள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டு பிர்காக்களிலும் மொத்தம் 33 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்ற வேண்டி உள்ளது. ஆனால் தற்சமயம் இதில் 13 கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால் 20 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதில் மிக மிக தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து காலியாக உள்ள 20 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்பி பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோருகின்றனர்.