வணிக வளாக கடைகளை வாடகைக்கு விட ஏற்பாடு


வணிக வளாக கடைகளை வாடகைக்கு விட ஏற்பாடு
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 2:44 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்ட பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மகளிர் சுய உதவிக்குழு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

வணிக வளாக கடைகள்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல்லில், மோகனூர் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட பூ மாலை வணிக வளாகம் அமைந்துள்ளது. தற்போது அந்த வளாகத்தின் புதுப்பிக்கும் பணி முடிவடைந்து சுய உதவிக்குழுக்களின் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. வணிக வளாகத்தில் உள்ள 12 கடைகளை மாதாந்திர மற்றும் அரையாண்டு அடிப்படையில் வாடகைக்கு வழங்கவும், கடைகளுக்கு வெளியே வளாகத்திற்குள் உள்ள இடங்களில் தினசரி அடிப்படையில் வாடகைக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே ஊரக மற்றும் நகர்ப்புற சமுதாய அமைப்புகளிடம் இருந்தும், சுய உதவிக்குழுக்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும்

அதில் 70 சதவீத கடைகள் தொழில் செய்யக்கூடிய சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும். அவர்கள் ஊரக பகுதியினர்களாக இருக்க வேண்டும். நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதியில் உள்ள குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கி விற்கலாம். நலிவுற்றோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் பூ மாலை வணிக வளாக கடைகளில் 30 சதவீதம் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் குழு உறுப்பினர்கள் முன்வராத பட்சத்தில் இதர குழு உறுப்பினர்களுக்கு உரிய வழிமுறையை பின்பற்றி கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். எனவே வருகிற 20-ந் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட இயக்க மேலாண்மை அழகின் திட்ட இயக்குனருக்கு தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story