ஜவுளி கடை உரிமையாளர் மண்டை உடைப்பு


ஜவுளி கடை உரிமையாளர் மண்டை உடைப்பு
x
தினத்தந்தி 2 Jun 2023 1:00 AM IST (Updated: 2 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகராட்சி வணிக வளாகத்தில் ஜவுளி கடை உரிமையாளரின் மண்டையை உடைத்தது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி வணிக வளாகத்தில் ஜவுளி கடை உரிமையாளரின் மண்டையை உடைத்தது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ரெடிமேடு ஜவுளி கடை

தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்து கடை, செல்போன் கடை, ரெடிமேடு துணிக்கடை உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் அந்த மாநகராட்சி வணிக வளாகத்தில் வியாபாரிகள் சங்க பொருளாளராகவும் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாண்டியன் கடையை அடைத்து விட்டு கீழ்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தை எடுக்க வந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். இதில் பாண்டியன் மண்டை உடைந்தது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

வலி தாங்க முடியாமல் பாண்டியன் சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மற்ற வியாபாரிகள், பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகத்தில் மது அருந்துவதை தட்டிக்கேட்டது தொடர்பான தகராறில் அவரை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து பாண்டியன் தஞ்சை நகர கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆணையரிடம் மனு

இந்த நிலையில் பாண்டியனின் உறவினர்கள், தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், பாண்டியன் மீது தாக்குதல் நடத்திய, அதே வணிக வளாகத்தில் கடை நடத்தி வருபவர் உள்பட 5 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.


Next Story