கைதான போலி அதிகாரி குறித்து திடுக்கிடும் தகவல்கள்
சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் ஜீப் திருட்டு வழக்கில் கைதான போலி அதிகாரி குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.
போலீஸ் ஜீப் திருட்டில் கைது
சேலம் குமாரசாமிப்பட்டியில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் ஜீப் ஒன்று திருட்டு போனது. இந்த திருட்டு தொடர்பாக தாரமங்கலம் தொளசம்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்த மதன்குமார் (வயது 38) என்பவரை அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த போலீஸ் ஜீப்பை மீட்டனர்.
மேலும் அவர் வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த காரில் தமிழக அரசு முத்திரை பொருத்தப்பட்டிருந்ததும், அவரிடம் முதல்-அமைச்சரின் பொது நிவராண நிதித்துறை உதவி இயக்குனர் என்ற அடையாள அட்டை இருந்தது தெரியவந்தது.
அதிகாரிகளுடன் பழக்கம்
அதைத்தொடர்ந்து மதன்குமாரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, பிளஸ்-2 வரை படித்துள்ள மதன்குமார் ஆரம்பத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு அரசு அதிகாரிகள் பலருடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்களுடன் சில நிகழ்ச்சிகளுக்கு சென்று உள்ளார்.
அப்போது அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் மரியாதை பார்த்துவிட்டு, தனக்கும் இதுபோன்று மரியாதை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து உள்ளார். இதையடுத்து அவர் பழைய கார் ஒன்று வாங்கி அதில் அரசு முத்திரையை பொருத்தினார். பின்னர் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரி போல் நடித்து பலரை ஏமாற்றி உள்ளார்.
பல இடங்களில் கைவரிசை
மதன்குமார் தாரமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு அடிக்கடி சென்று கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக கூறி காரில் டீசல் நிரப்பி ரூ.1 லட்சத்து 65 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் மதன்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பல இடங்களில் போலி அதிகாரி போல் நடத்தி கைவரிசை காட்டி உள்ளதாக கூறப்படுப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ேபாலீசார் மீது நடவடிக்கை
இதற்கிடையில் ஆயுதப்படை மைதானத்தில் ஜீப் திருட்டு போன விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுதப்படை மைதானத்திலேயே போலீஸ் ஜீப் திருட்டு போன சம்பவம் உயர் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுதொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் ஜீப் திருட்டு போனதில் கவனக்குறைவாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.