சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: காதலிக்க மறுத்த கேரள இளம்பெண்ணை மதுபாட்டிலால் தாக்கி கொல்ல முயற்சி - வாலிபர் கைது


சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: காதலிக்க மறுத்த கேரள இளம்பெண்ணை மதுபாட்டிலால் தாக்கி கொல்ல முயற்சி - வாலிபர் கைது
x

காதலிக்க மறுத்த கேரள இளம்பெண்ணை மதுபாட்டிலால் தாக்கி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனு ஜோசப் (வயது 20). இவர் ஓட்டல் மேனஜ்மென்ட் படித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர் வேலைக்கு சேர்ந்தார்.

ஓட்டலின் பின்புறம் உள்ள விடுதி ஒன்றில் இவர் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு சோனு ஓட்டலில் வேலை முடிந்தபிறகு, தங்கி இருந்த விடுதிக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் சோனுவை வழிமறித்து தகராறு செய்தார். பின்னர் திடீரென்று, சோனுவை உடைந்த மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கினார். அவரது முகத்தில் பாட்டில் குத்து பலமாக விழுந்தது. ரத்தம் கொட்டியது.

சோனு மயங்கி கீழே சாய்ந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். பொதுமக்களை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். காயத்துடன் உயிருக்கு போராடிய இளம்பெண் சோனுவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சைக்கு பின் சோனு உயிர் பிழைத்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் கோபி உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் விசாரணை நடத்தினார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வந்த, சோனுவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். வாக்கு மூலம் பெறப்பட்டது. அவர் கூறியதாவது:-

என்னை தாக்கி, கொல்ல முயன்றவர் பெயர் நவீன் (25). சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர். நான் சென்னைக்கு வேலைக்கு வருவதற்கு முன்பு பேஸ்புக் மூலம் என்னிடம் அறிமுகம் ஆனார். அடிக்கடி பேசுவார். என் மீது அன்பு காட்டுவது போல பேசுவார். ஆனால் நான் அவரிடம் பெயர் அளவுக்கு மட்டும் பேசினேன்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நான் சென்னையில் வேலைக்கு வந்து விட்டேன். அதன்பிறகு நான் அவரிடம் பேசவில்லை. நான் சென்னைக்கு வந்ததையும் அவரிடம் சொல்லவில்லை. ஆனால் எப்படியோ, நான் சென்னையில் வேலைக்கு சேர்ந்ததை தெரிந்து கொண்டு, நவீன் என்னை வந்து சந்தித்தார். நான் வேலை பார்த்த ஓட்டலுக்கு வெளியில் வந்து தினமும் நிற்பார்.

திடீரென்று அவர் என்னை காதலிப்பதாக சொன்னார். என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். ஆனால் நான் அப்போதே, அவரது காதலை ஏற்கவில்லை. நான் காதலிக்கும் நிலையில் இல்லை. என்னை வந்து சந்திக்க வேண்டாம், என்று அவரிடம் கூறினேன்.

மேலும் அவர் சென்னை கடற்படை அலுவலகத்தில் மாதம், ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக வேலை பார்ப்பதாக கூறினார்.

ஆனால் எதுவாக இருந்தாலும், நீங்கள் வேறு பெண்ணை பாருங்கள். நான் உங்களை காதலிக்க வில்லை. எனக்கு நிறைய லட்சியங்கள் உள்ளது என்று கூறி அவரிடம் இருந்து விலகிச் சென்றேன். மேலும் அவரிடம் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. விமான பணிப்பெண் வேலைக்கு முயற்சித்து வந்தேன். அந்த வேலை கிடைத்ததும், சென்னையில் இருந்து போய் விடுவேன் என்பதால், அவரது பேச்சை நான் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் என் பின்னால் பேசிக்கொண்டே வருவார். நான் அதை சட்டை செய்யாமல், நடந்து போய்க்கொண்டே இருப்பேன். நான் தங்கி இருக்கும் விடுதி வாசல்வரை வந்ததும், அவர் திரும்பி போய்விடுவார்.

அதுபோல் தான் சம்பவ தினத்தன்றும் பேசிக்கொண்டே வந்தவர் திடீரென்று வெறி பிடித்தவர் போல ஆனார். என்னைத்தான், நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். உன்னை என்னால் மறக்க முடியவில்லை. நீ இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை. நீ விரும்பவில்லை என்று கருதி எனது குறைந்த சம்பள வேலையையும் விட்டுவிட்டேன். நல்ல வேலைக்கு முயற்சித்து வருகிறேன், என்றெல்லாம் ஆவேசமாக பேசினார்.

நான் எதிர்பாராத வகையில் அவர் மறைத்து வைத்திருந்த உடைந்த மது பாட்டிலால் கழுத்தை குறிவைத்து குத்தினார். நல்ல வேளையாக நான் திரும்பி விட்டேன். இதனால் குத்து முகத்தில் விழுந்துவிட்டது. கழுத்தில் குத்து விழுந்து இருந்தால், நான் இறந்து இருப்பேன். அவரது செயல் ஏற்க முடியாதது.

நான் எந்த சந்தர்ப்பத்திலும், அவரை காதலிப்பதாக சொல்லவில்லை. அவரை சமாளித்து எப்படியாவது, துரத்தி விடலாம், என்று கருதினேன். அது வேறு விதமாக முடிந்துவிட்டது.

இவ்வாறு சோனு கூறியதை புகாராக பதிவு செய்து, போலீசார் நவீன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

நவீன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போலீசாரிடம் கூறுகையில், சோனு என்னை காதலிக்கவில்லை என்று சொன்னாலும், அவள் உள் மனது என்னை விரும்பியது. அவள் ஒரு போதும் கூட வெறுப்பாக பேச வில்லை. எப்படியாவது என்னை ஏற்றுக்கொள்வாள், என்ற நம்பிக்கையோடு, காதல் வெறிபிடித்து அவள் பின்னால் சுற்றிச் சுற்றி வந்தேன்.

ஏன், அவள் என்னிடம், பேஸ்புக்கில் பேச வேண்டும். அவளுக்காக நான் பார்த்த வேலையை விட்டேன். பட்டப்படிப்பு படித்திருந்த நான், மேல் படிப்பு படிக்க முடிவு செய்தேன். நல்ல வேலைக்கு போகவும், முடிவு செய்தேன். நான் அவளை கொலை செய்ய நினைக்கவில்லை. மிரட்டுவதற்காகவே, அவளை பாட்டிலால் குத்தினேன் என்று தெரிவித்தார்.

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் மாணவி சத்யா, அவரது காதலனால் ரெயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட பிறகு, இதுபோன்ற காதல் பிரச்சினை தாக்குதல்கள் சென்னையில் அதிகரித்து வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story