சிவசங்கர் பாபா வழக்கு: புகார் அளித்த மாணவியை ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சிவசங்கர் பாபா வழக்கு மீதான விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து கேளம்பாக்கம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வக்கீல் ஆஸ்திரேலியாவில் இருந்து மாணவி அளித்த புகாரில் உண்மைத் தன்மையில் கேள்வி எழுகிறது என வாதிட்டார். இதையடுத்து மின்னஞ்சலில் புகார் அளித்த மாணவியை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் . மாணவியை ஆஜர்படுத்தும் வரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதி வி.சிவஞானம் மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.