அணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்பதால் பரபரப்பு
ஜெனரேட்டர்களை ஏற்றிக் கொண்டு வந்த மிதவைக் கப்பல் கூடங்குளம் அருகே பாறையில் தரை தட்டி நின்றவாறு உள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியாவின் நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்கு மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில், அந்த அணு உலைகளுக்கான 2 ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் அந்த ஜெனரேட்டர்களை தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இழுவைக் கப்பல் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து சில கடல் மைல்கள் தூரத்தில் இழுவைக் கப்பலுக்கும், மிதவைக் கப்பலுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெனரேட்டர்களை ஏற்றிக் கொண்டு வந்த மிதவைக் கப்பல் தற்போது கூடங்குளம் அருகே பாறையில் தரை தட்டி நின்றவாறு உள்ளது. இதையடுத்து தரை தட்டி நிற்கும் கப்பலை மீட்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனமும், கடலோர பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.