கடலூர் உழவர் சந்தை மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு இடமாற்றம்
கடலூர் உழவர் சந்தை மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
கடலூர் அண்ணாபாலம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு கடலூரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு சென்றனர். இந்த நிலையில் உழவர் சந்தையில் போதிய வசதிகள் இல்லாததால், நவீனமயமாக்க முடிவு செய்து, அதற்காக ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையொட்டி உழவர் சந்தை தற்காலிகமாக மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் உழவர் சந்தைக்கு விளை பொருட்களை கொண்டு வந்து வியாபாரம் செய்த விவசாயிகள் அனைவரும், மைதானத்திற்கு சென்று விளை பொருட்களை குவித்து வைத்தனர்.
விவசாயிகள் அவதி
பின்னர் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட இடத்தில் விளை பொருட்களை வைத்து வியாபாரம் செய்ய தொடங்கினர். உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது பற்றி அறியாத பெரும்பாலான மக்கள், அண்ணா பாலம் அருகில் உள்ள உழவர் சந்தைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பியதையும் காண முடிந்தது.மேலும் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உழவர் சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும், அவர்களுக்கென்று குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும் கொட்டகை ஏதும் அமைக்கப்படாததால், சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்தபடி வியாபாரம் செய்தனர். இதனால் அவதியடைந்த விவசாயிகள், தங்களுக்கு தற்காலிகமாக கொட்டகை அமைத்து கொடுப்பதுடன், குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.