டயாலிசிஸ் மையத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதால் நோயாளிகள் அவதி


டயாலிசிஸ் மையத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதால் நோயாளிகள் அவதி
x

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் மையத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதால் நோயாளிகள் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு செய்ய முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர்

டயாலிசிஸ் மையம்

பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 18 டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. ஏழை-எளியவர்கள் மற்றும் பணம் செலவு செய்து தனியார் டயாலிசிஸ் மையத்திற்கு சென்று சிகிச்சை பெற வசதி இல்லாத, பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் இந்த டயாலிசிஸ் மையத்திற்கு வந்து சுழற்சி முறையில் ரத்த சுத்திகரிப்பு செய்து செல்கின்றனர். இந்த மையம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்மாடி கட்டிடத்தின் முதல் தளத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதால் கடந்த சிலநாட்களாக 80-க்கும் மேற்பட்ட நோயாளிகள் டயாலிசிஸ் செய்து கொள்ள முடியாமல் நாள் தோறும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.

நோயாளிகள் வேண்டுகோள்

அரசு மருத்துவமனை நிர்வாகம் டயாலிசிஸ் மையத்தை இடமாற்றம் செய்யும்போது அதற்குரிய மாற்று ஏற்பாடு செய்து அவசரத்திற்காக சில டயாலிசிஸ் எந்திரங்களை செயல்பட வைத்து மீதமுள்ளவற்றை இடமாற்றம் செய்தால் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்த நிலையில் மாற்று ஏற்பாடு செய்யாமல் டயாலிசிஸ் மையத்தை இடமாற்றம் செய்வதால் உரிய ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருவதாகவும், சிகிச்சை பெற வந்து நீண்ட நேரமாக காத்திருந்த போதிலும் சிகிச்சை பெற முடியாத விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று டயாலிசிஸ் நோயாளிகள் தெரிவித்தனர். இதில் மாவட்ட கலெக்டரும், நலப்பணிகள் இணை இயக்குனரும் கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்குமாறுடயாலிசிஸ் நோயாளிகள் வேண்டுகோள் விடுத்தனர்.


Next Story